Thursday, November 5, 2015

வானவில்- ஜாஸ் சினிமாஸ்- டுவிட்டரில் ஆர்யா.. & பிகு ஹிந்தி திரைப்படம்

பார்த்த படம் : பிகு (ஹிந்தி) 

அமிதாப் பச்சன் (தந்தை) - தீபிகா படுகோனே (மகள்) நடிப்பில் வித்தியாச கதையம்சம் உள்ள படம் பிகு.



மிக வயதான அமிதாப் - தனது உடல்நிலை பற்றி அதிகமாகவே கவலை கொள்பவர்..குறிப்பாக மோஷன் சரியே செல்லவில்லை என சதா பேசி வருந்துபவர் (வீட்டில் படம் பார்த்தவாறே சாப்பிட முயல வேண்டாம்.. மோஷன் பற்றி விலாவாரியான டயலாக்ஸ் 5 நிமிடத்துக்கொரு முறை வரும் ) - தனது சொந்த ஊர் கொல்கத்தாவிற்கு  ஒரு முறை காரில் சென்று வர எண்ணுகிறார்... அந்த பயணமும், அதன் முடிவும் தான் கதை...

படத்தின் மிகபெரும் ஆச்சரியம் தீபிகா படுகோனே தான்.

பிகு என்கிற அவர் பாத்திரமே செம வித்யாசமானது.. தந்தையான அமிதாப்  அவரை எந்த இளைஞனிடமாவது அறிமுகம் செய்யும் போதே "அவள் ஒரு வெர்ஜின் கிடையாது தெரியுமா " என்கிறார்..

தந்தைக்கும் அவருக்கும் எப்போதும் நிலவும் சண்டை- அதை மீறி அவர் மீதுள்ள அக்கறை - தீபிகா நடிப்பை பெரிதும் ரசித்த படம் இது..

பெற்றோருடன் தொடர் பிணக்கு இருந்தாலும் கூட - அவர்கள் வயதான காலத்தில் அவர்களுடன் மகன் அல்லது மகள் இருக்க வேண்டிய அவசியத்தை படம் அழகாக பதிவு செய்கிறது....

கோவன் கைது...

மது விலக்கை அமல் படுத்தக் கோரியும், இதனை அமல் படுத்தாத முதல்வரை கண்டித்தும் பாடிய கோவன் என்கிற பாடகர் கைது செய்யப்பட்டது நிச்சயம் வருந்த தக்க- கண்டிக்கத்தக்க விஷயம்.

அ. தி. மு. க - ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இத்தகைய சம்பவங்கள் நடப்பது புதிதல்ல..

சென்ற முறையெல்லாம் மிக அதிக முறை நடந்திருக்கும். இம்முறை சற்று குறைவு.

தனக்கு பிடிக்காத முதல்வர்- பிரதமர் என்றால் சோ - தனது துக்ளக்கிலேயே எவ்வளவு மோசமாய் கிண்டல் அடிப்பார்..

இவ்விஷயம் ஆளும் கட்சிக்கு எதிராக மட்டுமே வேலை செய்யும்.. நிச்சயம் அவர்களுக்கு எந்த விதத்திலும் பலன் தர போவதில்லை.

விராத் கோலி தம்பி.. 



ரசித்த கவிதை 

எத்தனை பேர்
இழுத்துமென்ன
இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்..

*****
ஒரு வரியில் எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லி செல்கிறது இக்கவிதை ! கோயில் தேர்கள் இன்னும் கூட சேரிக்குள் செல்ல முடியாமல் தான் பல ஊர்கள் இருக்கின்றன !

சென்னை பக்கம் : ஜாஸ் சினிமாஸ்  ஆன வேளச்சேரி லூக்ஸ் 

சென்னையில் நிச்சயம் ஒரு நல்ல தியேட்டர் ஆக இருந்தது லூக்ஸ் சினிமாஸ்  (சிலர் லக்ஸ் என்றும் கூறுவதுண்டு ) ; இதனை "சின்னம்மா" சசிகலா அவர்கள் வாங்கியிருக்கிறார்.. இது பற்றி ஏற்கனவே அரசல் புரசலாக சொல்லபட்டாலும் ஹிந்து பத்திரிக்கை - அந்த நிறுவனத்தில் இயக்குனர்கள் பட்டியல் / ஷேர் ஹோல்டர் பட்டியல் பார்த்து சசிகலா மற்றும் இளவரசி தான் ஷேர் ஹோல்டர்கள் என எழுதியுள்ளது... 1000 கோடி எப்படி வந்தது .. எப்படி வாங்க முடிந்தது என்பதெல்லாம் இருக்கட்டும்.. நம்ம கவலை வேறு !

பழைய லூக்ஸ் சினிமாஸ் தந்த அதே நல்ல படம் பார்க்கும் அனுபவத்தை ஜாஸ் தருமா? " எங்க தியேட்டர்... நீங்க எதுவும் கேட்க கூடாது" என்ற ஆளும் கட்சி எண்ணத்தோடு தான் பராமரிப்பார்களா தெரிய வில்லை..

நிற்க. இந்த மாலில் பார்க்கிங் செலவு அதிகம்.. ஆயினும் சினிமா மட்டும் பார்த்தால் - டிக்கெட்டில் சீல் போட்டு - மணிக்கணக்கில் இல்லாமல் குறிப்பிட்ட அளவு மட்டுமே பார்க்கிங் சார்ஜ் வாங்குவார்கள். இது ஒரு தகவல்..

மற்றொன்று.. பீனிக்ஸ் மால் அருகில் இரண்டு தனியார் பைக் பார்க்கிங் - இடங்கள் உள்ளன. ஒன்று பீனிக்ஸ் மால் நுழைவு வாயிலுக்கு எதிரில்.. மற்றொன்று - 200 அடி சாலையில் BSA சைக்கிள் ஷாப் அருகில்..

பீனிக்ஸ் மால் செல்லும்போது டூ வீலர்களை இங்கு விட்டால் அதீத பார்க்கிங் சார்ஜில் இருந்து தப்பலாம் !

போஸ்டர் கார்னர்




பெண்கள் அதிகமாய் வேலைக்கு செல்ல துவங்கிய பின் - அவர்கள் பொறுப்புகள் மற்றும் சுமை பல மடங்கு அதிகமாகி விட்டது.. இந்த போஸ்டர் உணர்த்துவது அதைத் தான் !

ஹெல்த் பக்கம் :ட்விட்டரில் ஆர்யா 

நடிகர் ஆர்யா - உடற்பயிற்சிக்கு மிக அதிக முக்கியத்துவம் தருபவர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்.

ட்விட்டரில் பலரும் தினம் ஆர்யாவிடம் - ஆர்யா இன்று நான் 10 கிலோ மீட்டர் ஓடினேன்; இன்று நான் எவ்வளவு நீச்சல் அடித்தேன் தெரியுமா என்று தகவல் பரிமாறியபடி இருக்க, மனிதர் பலரது டுவிட்டை ரீ டுவிட் செய்து " சூப்பர்.. தூள் கிளப்பிட்டீங்க; அடுத்த வாரம் இன்னும் அதிமாகனும் " என கமண்ட் போடுகிறார்.

அதிலும் பெண்கள் யாராய் இருந்தாலும்  " டார்லிங் " தான்..இதற்கு மட்டும் விதி விலக்கே இல்லை  (நல்லவேளை ஆண்களை டார்லிங் என்பதில்லை )

தான் ஓடியதாக / உடற் பயிற்சி செய்ததாக சொல்லும் யாரும் - App - உதவியுடன் தான் ஓடிய கிலோ மீட்டர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தான் பகிர்கின்றனர்..

மிக பிசியான ஒரு நடிகர் - தான் மட்டுமல்லாது மற்றவர்களையும் உடற் பயிற்சிக்காக தொடர் ஊக்கம் அளிப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.. ! வேறு எந்த நடிகரும் இவர் போல செய்வதில்லை ! இந்த விஷயத்தில் நிச்சயம் ஆர்யாவை ரசிக்க/ பாராட்ட முடிகிறது !


2 comments:

  1. சுவையான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  2. வாங்கவில்லை.. வாடகைதான் என்று அறிவிப்பு வந்துள்ளது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...